சூரிய கிரகணத்தை அதிநவீன டெலஸ்கோப் மூலம் காட்டிய இளைஞர்
சூரிய கிரகணத்தை அதிநவீன டெலஸ்கோப் மூலம் காட்டிய இளைஞரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். பட்டதாரியான இவர் சிறுவயதில் முதல் வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டினார். நேற்று முன்தினம் மாலை சூரியகிரகணம் ஏற்பட்டது. அதனை அதிநவீன டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் இலவசமாக பார்க்க வைக்க மோகன்ராஜ் முடிவு செய்தார்.
அதன்படி அதிநவீன டெலஸ்கோப் வைத்து சூரிய கிரகணம் நிகழ்ந்து கொண்டிருந்ததை காட்டினார். இதனை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் அறிவியல் மையம் போன்ற இடங்களில்தான் மக்கள் பார்க்க முடியும். தொலைதூர ஊர்களில் அது சாத்தியமில்லை. வெறும் கண்களாலும் பார்க்கக்கூடாது என்பதால் சூரிய கிரகணம் நிகழும்போது பலர் வீட்டிலேயேயும் முடங்கி கிடப்பர். இப்படிப்பட்ட நிலையில் சேவை மனப்பான்மையுடன் தான் கற்ற அறிவியலை சாதாரண மக்களும் மாணவர்களும் அதிநவீன டெலஸ்கோப்பை இலவசமாக காட்டிய மோகன்ராஜை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.