விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
தண்டராம்பட்டு மற்றும் வந்தவாசி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
வாணாபுரம்
தண்டராம்பட்டு மற்றும் வந்தவாசி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்தியா முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகர்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புற பகுதிகளில் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, அதனை நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இதையொட்டி பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப்பணியை சிலை செய்யும் கலைஞர்கள் மட்டுமல்லாமல் கூலி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதி வடிவம்
அதன்படி தண்டராம்பட்டு பகுதியில் திருவண்ணாமலை மெயின்ரோட்டில் 5 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதற்கு இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் உள்ள விநாயகர் சிலையை விற்பனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, தச்சம்பட்டு, வெறையூர், தென்கரும்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து விநாயகர் சிலைகள் செய்பவர்கள் கூறியதாவது:-
விலை உயர்வு
கொரோனா காலகட்டத்தில் இருந்து சிலைகளின் விலை உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் மூலப்பொருட்களின் விலை அதிகமானதாகும். மேலும் நீர் நிலைகளில் கரைப்பதால் தண்ணீர் மாசு ஏற்படாத வகையில் அட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் சிலை செய்வதற்கு அதிக நாள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
பொதுவாக சிறிய சிலை முதல் பெரிய அளவிலான சிலைகள் அதற்கு தகுந்தார்போல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தற்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அதனை தயார் செய்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக சிலைகள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை.
ஆனால் இந்த ஆண்டு பல்வேறு வகையான சிலைகள் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக சிலை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வந்தவாசி
இதேபோல் வந்தவாசி சன்னதி தெருவில் மாசு இல்லாத பேப்பர் கூழ் கொண்டு விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சிவன் பார்வதி விநாயகர், பஞ்சமுக விநாயகர், மயில்வாகன விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குழந்தை விநாயகர், மும்மூர்த்தி விநாயகர் உள்ளிட்ட பல தரப்பட்ட விநாயகர் சிலைகளை சிலை வடிவமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
பலவிதமான வண்ணங்களை கொண்டு தயாராகும் விநாயகர் சிலைகள் வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், மருதாடு, தென்னாங்கூர், தெள்ளார், பொன்னூர், கீழ் கொவளைவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வாங்கி செல்வார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.