தட்டார்மடம் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

தட்டார்மடம் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-24 15:42 GMT

தட்டார்மடம்,:

தட்டார்மடம் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, பின்னர் அவற்றை நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம்.

தட்டார்மடம் அருகே கொம்மடிக்கோட்டை வாலகுருசாமி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு காஞ்சீபுரத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கியிருந்து 3 அடி முதல் 9 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை எழில்மிகு கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர். பல வண்ணங்களில் பொலிவுடன் திகழும் விநாயகர் சிலைகள் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

தேவை அதிகரிப்பு

இங்கு தயாரான விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக வாகனங்களில் அனுப்பி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்றது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட பல்வேறு இந்து அமைப்பினரும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் விநாயகர் சிலைகளின் தேவைப்பாடும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்