விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
ரிஷிவந்தியத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.;
ரிஷிவந்தியம்
விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வீடுகள், கோவில்கள் மட்டுமின்றி பொது இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். பின்னர் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகில் உள்ள ஆறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ரிஷிவந்தியத்திலும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப ஒரு அடி முதல் 5 அடி, 15 அடி என பல்வேறு உயரங்களில், வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒருபுறம் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இன்னொரு புறம் வடிவமைக்கப்பட்ட வினாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுகிறது.
சிவலிங்கத்தை கட்டி தழுவியநிலையில் விநாயகர், சிவன்,பாா்வதியுடன் கூடிய விநாயகர், ஜெய கணபதி, ராஜகணபதி, சிங்கமுக கணபதி, சிவலிங்க கணபதி, காளையுடன் அமர்ந்திருக்கும் விநாயகர், எலியுடன் அமர்ந்திருக்கும் விநாயகர் என இப்படி பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து சிலை வடிவமைப்பாளர் மற்றும் உரிமையாளர் ரங்கநாதன் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாகத்தின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் தடைபட்டிருந்ததால் சிலைகள் விற்பனை சற்று மந்தமாக காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இல்லாததால் அதிகளவில் விநாயகர் சிலைகள் விற்பனை ஆகும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் சிலைகளை தயாரித்து வருகிறோம். குறைந்த பட்சம் ஒரு அடி முதல் அதிகபட்சம் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வடிவமைக்கிறோம். சிலைகளை பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.