குடிநீர் குழாய் பழுதை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும்
குடிநீர் குழாய் பழுதை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும் என 4-வது மண்டலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.;
வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டலக்குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவிகமிஷனர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். இதில், 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் செய்ய வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில், 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. அதனால் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. அதனை தவிர்க்க பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. எனவே கொசு மருந்து அடிக்கடி அடிக்க வேண்டும். மண்டலக்குழு கூட்டம் நடத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. எனவே புதிதாக கூட்ட அரங்கம் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு வார்டுகளில் சிறுபாலம், கால்வாய் அமைத்தல், ஆழ்துளை கிணற்றுக்கு மின்மோட்டார், குடிநீர் தொட்டி அமைத்தல், குடிநீர் குழாய் உடைப்புகளை சரிசெய்தல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், இளநிலை பொறியாளர் சீனிவாசன், உதவிபொறியாளர் செல்வராஜ், உதவி வருவாய் அலுவலர் தனசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.