மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிதாக இணைந்துள்ள பயனாளிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

Update: 2023-11-10 06:10 GMT

சென்னை,

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

அவ்வாறு பரிசீலிக்கப்பட்டதில், தற்போது புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர். அதன்படி, புதிதாக இணைந்துள்ள பயனாளிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 2-வது கட்ட திட்டத்தை தொடங்கிவைத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை வழங்கினார். உடல்நல பாதிப்பு இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் முதல் அமைச்சர் இந்த விழாவில் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது;

என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை. தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது எனது உடல்வலி குறைந்து மனம் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த 1,000 ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட கொடுக்கிற எனக்கு அதிக மகிழ்ச்சி உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என பலர் கூறினர். செயல்படுத்த முடியாது என கூறிய மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம். மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக மாறியுள்ளது.

இது  உதவித்தொகை இல்லை, உரிமைத்தொகை. இந்த உரிமைத்தொகை உண்மையில் தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் எங்கள் அரசு தெளிவாக இருந்தது. இந்த திட்டத்தின் நோக்கத்தையும், தெளிவையும் மக்கள் புரிந்துகொண்டார்கள். தகுதியான அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. " இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்