அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்
தோட்டத்தில் வேலை செய்தபோது கடித்த பாம்புடன், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.;
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குண்டாம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ். அவருடைய மனைவி பெரியக்காள் (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று காலை இவர், அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு விஷப்பாம்பு கடித்து விட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
இதையடுத்து அவருடன் வேலை செய்த சக தொழிலாளர்கள், பெரியக்காளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அப்போது பெரியக்காளை கடித்த பாம்பையும் சக தொழிலாளர்கள் பிடித்து கொண்டு வந்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் பெரியக்காளை கடித்த பாம்பை காண்பித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும்படி கேட்டு கொண்டனர்.
மேலும் விஷப்பாம்பை பார்த்ததால் சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதைக்கண்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பாம்பை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனைக்கு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சை பெறுவதற்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.