பெண்ணை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

பெண்ணை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2023-10-10 19:00 GMT

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் சாந்தி (வயது 36). இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார்.

இவர் ஆம்புலன்ஸ் டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சங்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (46) என்பவரை கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

எரித்துக் கொலை

இவர்கள் குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆரோக்கியசாமி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 6-8-2013 அன்று ஆரோக்கியசாமி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக கூறினார். அதற்கு ஆரோக்கியசாமி, நீ இறந்தால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறினார். உடனே சாந்தி தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றினார். அப்போது ஆரோக்கியசாமி, நீ ஏன் கஷ்டப்படுகிறாய் என்று கூறி தனது கையில் இருந்த தீப்பெட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து கொளுத்தி சாந்தி மீது போட்டார். இதில் சாந்தி உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் 15-8-2013 அன்று பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை தீவைத்து எரித்துக் கொன்றதாக ஆரோக்கியசாமியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நெல்லை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கியசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெய பிரபா ஆஜரானார்.


Tags:    

மேலும் செய்திகள்