கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கணவரை உதறிவிட்டு போதகருடன் சென்ற பெண்
கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கணவரை உதறிவிட்டு போதகருடன் பெண் சென்றார்.;
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு 51 வயதுடைய மனைவி உண்டு. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களது வீட்டிக்கு ததேயுபுரம்காலனியை சேர்ந்த 45 வயதுடைய மத போதகர் ஒருவர் போதனை செய்ய அடிக்கடி வந்து சென்றார். அந்த போதகருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கும், போதகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டில் இருந்த பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் போதகருடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலர்கள் இருவரும் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் ஆட்டோ டிரைவருக்கு தகவல் கொடுத்து அவரை வரவழைத்தனர்.
போலீஸ் நிலையம் வந்த ஆட்டோ டிரைவர் மனைவியை பார்த்ததும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அத்துடன் போலீசாரும் கணவருடன் ெசல்லுமாறு அறிவுரை கூறினர். ஆனால், அந்த பெண் போலீசாரிடம் கூறும் போது, கணவர் தன்னை தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும் எனவே, கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும், போதகருடன் செல்வதாகவும் கூறினார். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும் அந்த பெண் தனது முடிவில் மாறவில்லை. இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடம் இருந்தும் எழுதி வாங்கிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கொல்லங்கோடு போலீஸ் நிைலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.