தகராறில் காயம் அடைந்த பெண் சாவு

கோவையில் தொழில் போட்டியால் ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்த பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-10 18:45 GMT


கோவையில் தொழில் போட்டியால் ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்த பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

காய்கறி வியாபாரம்

கோவை சேரன்மாநகர் வி.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கலாராணி (வயது 50). இவர் கோவை பீளமேட்டில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் தண்ணீர் பந்தல் சாலையில் தனியார் பள்ளி எதிரே சாலைேயாரத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவருடைய கடையின் அருகே சேரன்மாநகரை சேர்ந்த பரமேஸ்வரனின் மனைவி தேவி (45) என்பவரும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் 2 பேருக்கும், வியாபாரத்தில் போட்டி இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கலாராணியின் கடைக்கு வாகனத்தில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. அந்த வாகனத்தை அதன் டிரைவர், தேவியின் கடையின் முன்பு நிறுத்தியதாக தெரிகிறது. உடனே தேவி வாகனத்தை வேறு பகுதியில் நிறுத்தும்படி கூறியதால் அந்த வாகனம் வேறு பகுதியில் நிறுத்தப்பட்டது.

தாக்குதல்

மேலும் தேவி, தனது மகன் மணிகண்டனுடன்(27) கலாராணியிடம் அவரது கடைக்கு சென்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தேவி, மணிகண்டன் ஆகியோர் கலாராணியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினர். அத்துடன் கலாராணியின் நெஞ்சு பகுதி உள்பட பல்வேறு இடங்களில் கைகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த கலாராணி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி கலாராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய்-மகன் கைது

இது குறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவி, மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கலாராணிக்கு ஏற்கனவே இதய நோய் இருந்துள்ளது. மேலும் தேவி, மணிகண்டன் ஆகியோர் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கலாராணியை தாக்கவில்லை. எனவே அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர்தான் தெரியவரும். தற்போது 2 பேர் மீதும் 304(2) (கொலைக்கு மாறாக மரணம் விளைவித்தல்) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2 பேரும் சேர்ந்து தாக்கியதில்தான் அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்தால் பிரிவு மாற்றப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்