கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் கொடுத்து கொன்ற மனைவி
கொளத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் கொடுத்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தற்கொலை என நாடகமாடியது அம்பலமானது.;
கொளத்தூர்:
கொளத்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் கொடுத்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். தற்கொலை என நாடகமாடியது அம்பலமானது.
தொழிலாளி
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள காரைக்காடு வீரகாரன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தொடர்ந்து அவரது மனைவி புகழரசி, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.
கொலை
இதனிடையே சக்திவேல் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி நேற்று கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சக்திவேலின் மனைவி புகழரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக ஒத்துக்கொண்டார். தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
உல்லாசம்
எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சக்திவேல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இதனிடையே எனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த கள்ளக்காதல் விஷயம் எனது கணவர் சக்திவேலுக்கு தெரியவந்தது.
இதனால் அவர் என்னை கண்டித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை, தீர்த்துக்கட்ட வேண்டும் என முடிவு செய்தேன். இதற்காக 13-ந் தேதி இரவு வழக்கம்போல் குடிபோதையில் எனது கணவர் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அவருக்கு முதலில் 10 தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தேன். ஆனால் அவர் அதில் உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மீண்டும் தேனீர் போட்டு, அதில் தோட்டத்திற்கு வைத்திருந்த விஷத்தை கலந்து கொடுத்தேன். எனினும் அவர் பிழைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணிய நான், மீண்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து அவருக்கு ஊட்டி விட்டேன். தொடர்ந்து விஷம் ஏறியதால், அவர் துடிதுடித்து இறந்து விட்டார்.
நாடகமாடினேன்
தொடர்ந்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்ய, முத்துக்குமாரை போனில் தொடர்பு வீட்டுக்கு வரும்படி கூறினேன். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார், சக்திவேல் இறந்ததை உறுதி செய்த பின்பு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். எனினும் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகழரசியையும், அவரது கள்ளக்காதலன் முத்துக்குமாரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலை கண்டித்த கணவரை, அவரது மனைவியே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் கொளத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.