வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி பலி
நெல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.;
பேட்டை:
நெல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
வீடு புதுப்பிக்கும் பணி
நெல்லை பழைய பேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது வீட்டை புதுப்பித்து கட்ட முடிவு செய்தார். இதற்காக ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஒப்பந்தம் எடுத்து பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று பழைய கான்கிரீட் தளத்தை எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளத்தை சேர்ந்த வேலுசாமி (57) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தொழிலாளி பலி
கட்டிடத்தின் மேல் தளத்தில் எந்திரம் மூலம் கான்கிரீட் சுவரை இடித்துக் கொண்டிருந்த போது, வேலுசாமி சிலாப் சுவர் இடிந்து அதனுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு வேலுசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவம் இடத்தை நேரில் வந்து பார்வையிட்டனர். பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.