அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்யும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்
மேட்டு மருதூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சிக்குட்பட்டது மேட்டுமருதூர் கிராம். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க இங்குள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் அவ்வாறு உள்ள இடத்தின் அளவை அளவீடு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் நேற்று அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் முட்ெசடிகள் வளர்ந்துள்ள காரணத்தினால் அதை அகற்றி விட்டு அளக்க முடிவு செய்து முள் செடிகளை அகற்ற பொக்லைன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு தகவலும் கிராம மக்களுக்கு அளிக்காமல் எவ்வாறு பணிகள் மேற்கொள்ளலாம் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுபோல இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வரும் இடத்தை அதிகாரிகள் எவ்வாறு அகற்றலாம் கேள்வி எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் இங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். அப்போது பல ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டவரும் இடத்தை எங்களுக்கே வழங்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.அரசு விதியின்படி வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்படும் எனவே வீட்டுமனை இல்லாத பொதுமக்கள் இது தொடர்பாக மனு அளிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார். இந்த பிரச்சினை காரணமாக மேட்டுமருதூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை அளவிடும் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.