கர்ப்பிணியை 8 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிவந்த கிராம மக்கள்

மலை கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 8 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்.;

Update: 2023-10-03 18:17 GMT

வாணியம்பாடி

மலை கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 8 கிலோமீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

சாலையில் மண் அரிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் நெக்னாமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு இதுவரை சாலை வசதி செய்யப்படாமல் உள்ளது. மலை கிராமத்திற்கு சாலைவசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக இருந்த கே.சி வீரமணி தலைமையில் வருவாய் துறையினர், வனத்துறையினர் இணைந்து மண் சாலை அமைத்தனர்.

இதன் மூலம் தற்காலிகமாக இருசக்கர வாகனங்களும், இதர சிறிய வாகனங்களும் சென்று வந்தன. அதன்பின்பு தார்சாலை அமைப்பதற்கான எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மண்சாலையில் பலஇடங்களில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டது.

டோலிகட்டி தூக்கிவந்தனர்

மலைபகுதியை சேர்ந்த ராஜகிளி என்பவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 23) என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு மண்சாலையில் அரிப்பு ஏற்பட்டு இருந்ததால், அவரை பொதுமக்கள் டோலி கட்டி 8 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதியில் தூக்கி வந்து வள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. போதிய அடிப்படை வசதி இல்லாமல் உள்ள இந்த நெக்னாமலை கிராமத்திற்கு உடனடியாக முறையான சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்