குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்

குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-09-26 18:53 GMT

விருதுநகர், 

குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊர்ப்புற நூலகங்கள்

தேச மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத் ராஜா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊர்ப்புற நூலகங்கள் கட்டப்பட்டு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவை முறையாக செயல்படாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் கிராமத்தில் இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நூலகங்களை உடனடியாக நூலகத்துறையிடம் ஒப்படைத்தால் நூலகங்கள் முறையாக செயல்பட வாய்ப்பு ஏற்படுவதுடன் கிராமப்புற இளைஞர்களும், கிராம மக்களும் நூலகங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் நூலகத்துறையில் பணியாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கும் பணி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

முறைகேடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் கன்னிசேரி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், கன்னி சேரி கிராம பஞ்சாயத்தில் திட்ட பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் அடிப்படையில் தெரிய வருவதால் இது குறித்து கிராம பஞ்சாயத்தின் கணக்குகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆக்கிரமிப்பு

நரிக்குடி யூனியன் வலையப்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், கிராம பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியுள்ளனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுக்குடிநீர்குழாயை அகற்றி விட்டதால் தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதாகவும் எங்கள் பகுதியில் குடிநீர் குழாய் போட மறுக்கும் நிலை உள்ளது. ஊர் கோவில் பகுதியில் குடிநீர் குழாய் போட்டால் நாங்கள் அங்கு சென்று குடிநீர் பிடிக்க வாய்ப்பு ஏற்படும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலிக்குடங்களுடன் வந்து வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்