ஊரையே காலி செய்த மலை கிராம மக்கள்

தேன்கனிக்கோட்டை அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மலை கிராமமக்கள் ஊரை காலி செய்தனர். புதிய வீடுகள் கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-05-30 14:58 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மலை கிராமமக்கள் ஊரை காலி செய்தனர். புதிய வீடுகள் கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊரை காலி செய்த மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட புள்ளஅள்ளி கிராமம் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி வழியாக மலை மீது ஏறி கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் மலையேறி சாலையே இல்லாத இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். மலைத்தொடர்கள் நிறைந்த புள்ளஅள்ளி கிராமம் 150 ஆண்டுகள் பழமையானது. இங்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி, குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர். இந்த கிராமத்தில் தற்போது 4 வீடுகளில் மட்டும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுமக்கள் இல்லாததால் வீடுகள் பராமரிப்பு இன்றி பாழடைந்து, புதர்மண்டி காணப்படுகின்றன. வீடுகளில் கிராமமக்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள், உடைந்த மேற்கூரை ஓடுகள், மண்பானைகள் உள்ளிட்டவைகள் அப்படியே கிடக்கின்றன.

டோலி கட்டி...

இங்கு வசிக்கும் பொதுமக்கள் தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கழுதைகள், குதிரைகள் மூலம் ஏற்றி வருகின்றனர். இந்த கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகளை டோலி கட்டி 8 கிலோமீட்டர் மலைப்பாதையின் வழியாக சுமந்து வந்து தர்மபுரி மாவட்டத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அங்கு வசிக்கும் மக்கள் கூறியதாவது:-

இந்த கிராமத்தில் வசித்த மலை கிராம மக்கள் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராமத்தை காலி செய்ய முடிவு செய்தனர். இதனால் தங்களது விவசாய நிலங்கள், வீடு, வாசல் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு வெளியேறி தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி பகுதிகளில் தற்போது வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

வீடுகள்

கிராமமக்கள் வசித்த வீடுகள் பாழடைந்து காணப்படுகிறது. பழமையான இக்கிராமத்தை விட்டு செல்ல மனமில்லாமல் சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டு வசித்து வருகின்றனர். மேலும் வனவிலங்கு அச்சத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகிறோம். இங்கு சாலை, பஸ் உள்ளிட்ட வசதிகள் இல்லை. தமிழக அரசு அடிப்படை வசதிகள் செய்து புதிய வீடுகளை கட்டி கொடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்