வாகன தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும்

ஆன்லைனில் போலீசார் அபராதம் விதிப்பதை கைவிட்டு, வாகன தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.;

Update: 2023-07-10 19:30 GMT

ஊட்டி

ஆன்லைனில் போலீசார் அபராதம் விதிப்பதை கைவிட்டு, வாகன தணிக்கை செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.

சுற்றுலா வாகன டிரைவர்கள்

நீலகிரி மாவட்டத்தில் 2,000 சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர். அவர்கள் தற்போது ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளனர். தற்போது சுற்றுலா வாகனங்களை தணிக்கை செய்யாமலே, செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து போலீசார் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கின்றனர்.

கைவிட வேண்டும்

அபராதம் விதித்த பின்னர் தான் குறுஞ்செய்தி மூலம் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு இந்த தகவல் தெரியவருகிறது. அதன் பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்யும் போது ஆவணங்களை சரி பார்த்த பின்னர், தவறுகள் ஏதாவது இருந்தால் அதற்கு ஏற்றார் போல் அபராதம் விதிப்பார்கள்.

தற்போது போலீசாரின் விருப்பத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, இனி போலீசார் வாகன தணிக்கை செய்து அப்போது ஆவணங்கள் ஏதும் இல்லாவிட்டால் மட்டும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். மேலும் டிரைவர்களிடம் போலீசார் ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்