சாலை தடுப்பில் மோதி வேன் கவிழ்ந்தது; பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம்
சாலை தடுப்பில் மோதி வேன் கவிழ்ந்தது; பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.;
சாலை தடுப்பில் மோதி வேன் கவிழ்ந்தது; பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
நடுரோட்டில் கவிழ்ந்தது
மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் மினி வேனில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கும்பகோணத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றார். வேனில் 10 பெண்கள், சிறுவன் உள்பட 24 பேர் பயணம் செய்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு அவர்கள் மதுரைக்கு வந்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் மதுரை பாண்டிக்கோவில் ரிங் ரோட்டில் மினி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சாலை தடுப்பில் மோதி நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 பேர் காயம்
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வேனில் பயணித்த பெண்கள் உள்பட 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.