தாமரை பூ பறிக்க சென்ற போது இரட்டை குழந்தைகள் ஏரியில் மூழ்கி சாவு
தாமரை பூ பறிக்க ஏரிக்கு சென்ற இரட்டை குழந்தைகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.;
இரட்டை குழந்தைகள்
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மோகன் பிரபு, மோகனதேவி என இரட்டை குழந்தைகள் இருந்தது. இரட்டை குழந்தைகள் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட இருவரும் பாலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மோகன் பிரபு, மோகனதேவி இருவரும் வீட்டில் இருந்து வந்தனர்.
நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2 பேரும் வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு தாமரைப்பூ பறிக்க சென்றனர். தாமரை பூவை பறிக்க சென்ற 2 குழந்தைகளும் அங்கு இருந்த சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர்.
சாவு
இதை கவனிக்காத வீட்டார் பிள்ளைகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருப்பார்கள் என நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பதறி போன பெற்றோர் அருகே உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடினர். அங்கேயும் இல்லாததால் உறவினர்கள் உதவியுடன் பெற்றோர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது குருசாமி வீட்டின் அருகே உள்ள ஏரிக்கு சென்றிருப்பார்களோ என சந்தேகத்தின் பேரில் ஏரியில் இறங்கி தேடிய போது அங்கு இறந்த நிலையில் 2 குழந்தைகளின் உடலைகளை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரட்டை குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாமரை பூ பறிக்க சென்ற குழந்தைகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.