கர்நாடகாவில் தசரா விழாவில் பங்கேற்று திரும்பியபோது யானையை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் பாய்ந்தது சக்கரத்தில் சிக்கி டிரைவர் பரிதாப சாவு

Update: 2023-10-25 19:45 GMT

ஓசூர்

கர்நாடகாவில் தசரா விழாவில் பங்கேற்று திரும்பியபோது யானையை ஏற்றி சென்ற லாரி ஓசூர் அருகே பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீரங்கம் யானை

கர்நாடக மாநிலம் பன்னர்கட்டாவில் மாரியம்மன் கோவிலில் தசரா விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராணி என்ற யானை கலந்து கொண்டது. விழா முடிவடைந்த பின்னர், நேற்று முன்தினம் மீண்டும் யானையை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஸ்ரீரங்கம் நோக்கி வந்துகொண்டிருந்தது.

இந்த லாரியை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த டிரைவர் அந்தோணி (வயது50) ஓட்டினார். மேலும் அந்த லாரியில் பாகன்கள், பால்பாண்டி, ஜீவா ஆகியோர் உடன் வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் டிரைவர் லாரியை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி நடந்்து சென்றார்.

பள்ளத்தில் பாய்ந்தது

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி அருகில் இருந்த பள்ளத்தில் யானையுடன் பாய்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் அந்தோணி ஓடிவந்து லாரியில் ஏறி பிரேக் பிடிக்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் டிரைவர் அந்தோணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று டிரைவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கப்பட்டது. பின்னர் யானையை மாற்று வாகனம் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தசரா விழாவுக்கு சென்று திரும்பியபோது யானையுடன் லாரி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சக்கரத்தில் சிக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்