லாரியில் அச்சு உடைந்து கழன்று ஓடிய சக்கரங்கள்

லாரியில் அச்சு உடைந்து சக்கரங்கள் கழன்று ஓடின.

Update: 2023-05-05 19:02 GMT

தா.பழூர்:

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நேற்று ஒரு லாரி நிலக்கரி ஏற்றிக்கொண்டு அரியலூரில் உள்ள ஒரு சிமெண்டு ஆலைக்கு சென்றது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் அம்பேத்கர் நகர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, அந்த லாரியின் அச்சு உடைந்து அதில் இணைக்கப்பட்டிருந்த சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின. இதனால் பாரம் தாங்காமல் லாரியின் அச்சுப்பகுதி சாலையில் உரசியபடி நின்றது. லாரியில் இருந்து கழன்று ஓடிய சக்கரங்களில் இருந்தும், அச்சு உடைந்த பகுதியில் இருந்தும் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் லாரியின் பின்னால் வந்த வாகனங்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நின்றுவிட்டன. அந்த நேரத்தில் எதிர்திசையில் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் அக்கம், பக்கத்தில் இருந்த மக்கள் சக்கரங்களின் மீதும் லாரியின் அச்சுப்பகுதி மீதும் தங்கள் வீடுகளில் இருந்து எடுத்து வந்த தண்ணீரை ஊற்றி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த வாலிபர்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். லாரியில் அளவுக்கு அதிகமான சுமை ஏற்றப்பட்டு வந்திருக்கலாம் என்றும், நீண்ட தூரம் ஓய்வு இல்லாமல் லாரி இயக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் இவ்வாறு அச்சு உடைந்து சக்கரங்கள் கழன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து இது போன்ற சுமையை ஏற்றி வரும் லாரிகள் குறிப்பிட்ட அளவு பயணத்திற்கு பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, பின்னர் இயக்கப்படுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் இது போன்ற திடீர் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சில டிரைவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்