லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி தலைமை ஆசிரியை பலி

ராதாபுரம் அருகே மொபட்டில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-28 20:04 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் அருகே மொபட்டில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

தலைமை ஆசிரியை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் மாதவி (வயது 53). இவர் தெற்கு ஆறுபுளி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

தனது கணவர் ஊரான திசையன்விளை அருகே உள்ள ரம்மதாபுரத்தில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தினமும் ரம்மதாபுரத்தில் இருந்து தெற்கு ஆறுபுளியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு மொபட்டில் சென்று வந்தார்.

பரிதாப சாவு

நேற்று காலையில் மாதவி வழக்கம்போல் மொபட்டில் பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். ராதாபுரம் அருகே சீலாத்திகுளம்-முடவன்குளம் சாலையில் உள்ள ஒரு திருப்பத்தில் சென்றபோது, கல்குவாரியில் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியை மாதவி முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும், மொபட்டும் மோதிக் கொண்டன. இதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்த மாதவி லாரி சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பொதுமக்கள் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இந்த சாலையில் இனிமேல் லாரிகள் வராது என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

குடும்பம்

இந்த விபத்து குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த மாதவியின் கணவர் கென்னடி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பள்ளிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்