"மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-09-22 00:30 GMT

பேரையூர்

மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பொற்கிழி வழங்கும் விழா

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் நேற்று நடந்தது.

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சேடப்பட்டி முத்தையாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் அமைச்சர்கள் ரகுபதி, பெரிய கருப்பன், மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வெள்ளி ெகடிகாரத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நினைவுப்பரிசாக வழங்கினார். சேலம் மாநாட்டுக்கு மதுரை தி.மு.க. தெற்கு மாவட்டம் சார்பில் ரூ.50 லட்சத்துக்கான நிதியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

கேலிக்கூத்து

இதைதொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சேடப்பட்டி முத்தையா அரசியல் அனுபவம் பெற்றவர். 2 முறை நாடாளுமன்ற உறுப்பினர், 4 முறை சட்டமன்ற உறுப்பினர், ஒரு முறை சபாநாயகர் பொறுப்பு வகித்தவர். கட்சி வளர்ச்சிக்காக உழைத்தவர். அவரை போன்றே அவருடைய மகன் மணிமாறன் செயல்பட்டு வருகிறார்.

இளைஞர் அணி சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு நிதி உதவி கொடுத்து வருகிறோம். கடந்த மாதம் மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. எந்த மாநாட்டை சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியும். வரலாற்றிலேயே இப்படி ஒரு மாநாடு நடக்கக்கூடாது என்பதற்கு அது உதாரணம். அந்த மாநாட்டில் இயக்கத்தின் கொள்கை பேசப்பட்டதா, வரலாறு பேசப்பட்டதா? ஆனால் அந்த மாநாட்டில் ஆடல், பாடல் நிகழ்ச்சி, மிமிக்ரிதான் நடந்தது. இப்படிப்பட்ட கேலிக்கூத்தை இந்தியாவே பார்த்திருக்காது. அப்படிப்பட்ட மாநாட்டை நடத்தி காட்டினர்.

ஆனால் சேலத்தில் நடைபெற இருக்கும் தி.மு.க. இளைஞர் அணி மாநாடு என்பது இந்தியாவிலேயே இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை என்று கூறும் வகையிலும், இயக்கத்தின் வரலாறு, கொள்கைகள், அரசின் சாதனைகளை கூறுவதாகவும் நடைபெற உள்ளது.

நேரம் வந்து விட்டது

மத்திய பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையில், ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாரத பிரதமர் கேர் நிதிக்கு எந்த ஒரு கணக்கும் கிடையாது. இதுகுறித்து கேட்டால் யாருக்கும் தகுதி இல்லை என்கிறார்கள்.

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பேசுவது, தி.மு.க. ஆட்சியில் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான் என்கிறார். ஆமாம் கருணாநிதி குடும்பம் என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள குடும்பங்கள்தான். நீங்கள் 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து என்ன செய்தீர்கள், 15 லட்சம் தருவீர்கள் என்று சொன்னீர்கள். ஆனால் இதுவரை தரவில்லை. ஆனால் முதல்-அமைச்சர், மகளிருக்கு ரூ.1000 தருவோம் என்று சொன்னார். அதை தற்போது வழங்கி உள்ளார்.

2013-ல் மோடி இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று கூறினார். இந்தியாவை பாரத் என்று மாற்றப்போகிறார். இப்படிப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்