வங்கி ஊழியர் எடுத்து சென்ற ரூ.2 லட்சம் திருட்டு

ஆரணியில் ஏ.டி.எம். எந்திரத்தில் வைப்பதற்காக வங்கி ஊழியர் எடுத்து சென்ற ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;

Update: 2022-09-20 17:52 GMT

ஆரணி

ஆரணியில் ஏ.டி.எம். எந்திரத்தில் வைப்பதற்காக வங்கி ஊழியர் எடுத்து சென்ற ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

வங்கி ஊழியர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). இவர் தனியார் வங்கியில் ஏ.டி.எம். மையத்தின் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வாழைப்பந்தலில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை வைப்பதற்காக சுரேஷ் ஆரணியில் உள்ள ஒரு வங்கிக்கு இன்று பகல் 3 மணியளவில் சென்று ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 300 எடுத்தார்.

பின்னர் அதனை மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு வாழைப்பந்தல் நோக்கி சென்றார்.

ரூ.2 லட்சம் திருட்டு

அப்போது அவர் ஆரணி சத்தியமூர்த்தி சாலையில் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்க கடையின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சுரேஷ் ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆரணியில் பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருட்டு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்