கோவில் ஊழியர்களுக்கும் சட்டப்படி சம்பளம் வழங்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கோவில் ஊழியர்களுக்கும் சட்டப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-04-07 19:22 GMT

கோவில் ஊழியர்களுக்கும் சட்டப்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கோவில் ஊழியர்கள்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெரியநம்பிநரசிம்ம கோபாலன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறேன். இந்த கோவிலில் அர்ச்சகர்கள், மணியம், பேஷ்கர், ஓதுவார், தவில், நாதஸ்வரர் ஆகியோருக்கு சம வேலை, சம ஊதியம் வழங்கவும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இதை தடுக்கும் வகையிலான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

வருமானத்தில் சம்பளம்

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் தனித்தனி நிர்வாகம், வருமானம், செலவு மற்றும் பணியாளர்கள் உள்ளனர். அந்தந்த கோவில் வருமானத்தில் இருந்து தான் அங்கு பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

இங்குள்ள எல்லா கோவில்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியாது. சில கோவில்களில் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை கருத்தில் கொண்டு கோவில் பணியாளர்கள் நல நிதி உருவாக்கப்பட்டு, சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே கோவில்களில் சம ஊதியம், சம வேலை என்ற கோட்பாடு நியாயமற்றது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் பணியாற்றும் மனுதாரரின் தற்போதைய சம்பளம் ரூ.2,984 ஆக உள்ளது. இந்த சம்பளம் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு அவர் குடும்பத்தை நடத்துவது சாத்தியமற்றது. கோவில்கள் நமது கலாசாரத்தின் அங்கமாக விளங்குகிறது.

சட்டப்படி சம்பளம்

தமிழ்நாட்டில் மட்டும் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அதில் பல கோவில்கள் பழமையானவை. கட்டிடக்கலை மற்றும் கலாசார மதிப்பைக் கொண்டிருப்பதால் அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இதனை கோவில் ஊழியர்களால் மட்டுமே செய்ய முடியும்.

இந்த கோவில் நிர்வாகத்துக்காக மாநில அரசு சார்பில் அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே இந்த கோவில் நிர்வாகம் முழுமையும் அரசு சார்ந்தது. அங்குள்ள பணியாளர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது.

குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அடிப்படையில் பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. எனவே அந்த அரசாணை, ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது. அவர்களுக்கு சட்டப்படி ஊதியத்தை 8 வாரத்தில் நிர்ணயித்து வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்