அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டிப்போட்டு நின்ற வாலிபர் - தற்கொலைக்கு முயன்றதால் மேலும் பரபரப்பு

அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் வாலிபர் ஒருவர் முட்டிப்போட்டு நின்றார். திடீரென சாலையில் சென்ற பஸ் சக்கரத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-22 09:14 GMT

அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு ஐ.சி.எப். காலனியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் தனது குடும்ப பிரச்சினை தொடர்பாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், அந்த பெண்ணின் கணவரான கார்த்திக்(வயது 30) என்பவரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.

இதற்காக நேற்று காலையில் இருந்து மதியம் வரை மகளிர் போலீஸ் நிலையத்தில் காத்திருந்த கார்த்திக்கிடம் போலீசார் விசாரிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அங்கிருந்த போலீசாரிடம் அவர் கேட்டபோது, பெண் போலீஸ் ஒருவர், "உன்னை விசாரிக்க நேரமாகும். வெளியே சென்று முட்டிப்போடு" என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமும், விரக்தியும் அடைந்த கார்த்திக், போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டிப்போட்டு நின்றார். அவரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.இதை பார்த்த போலீசார், அவரை எழுந்து வரும்படி கூறினர். அப்போது கார்த்திக், திடீரென சாலையில் சென்ற பஸ் சக்கரத்தில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். பின்னர் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்குள் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனை சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்