சேர்த்து வைக்கக்கோரிய ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்த வாலிபர்: இன்ஸ்டாகிராமில் தோழியாகவே பழகினேன் என நீதிபதிகளிடம் தெரிவித்த இளம்பெண்
சேர்த்து வைக்கக்கோரிய ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்த வாலிபர்: இன்ஸ்டாகிராமில் தோழியாகவே பழகினேன் என நீதிபதிகளிடம் தெரிவித்த இளம்பெண்;
மதுரையைச் சேர்ந்த ஆனந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், என்னுடைய 21 வயதுள்ள வருங்கால மனைவியை சட்டவிரோதமாக போலீசார் அடைத்து வைத்து உள்ளனர். அந்த பெண்ணை மீட்டு ஆஜர்படுத்தவும், எங்களை சேர்த்து வைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணை நீதிபதிகள் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதிகள் விசாரித்தனர். நீதிபதிகளிடம் அந்த பெண் கூறியதாவது:-
மனுதாரர் இன்ஸ்டாகிராமில் என்னுடன் தகவல்களை பரிமாறி வந்தார். அவருடன் ஒரு தோழியாக மட்டுமே பழகினேன். அதை வைத்துக்கொண்டு என்னிடம் தவறாக நடக்க முயல்கிறார். இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக மட்டுமே பழகினோம்.
வேறு எந்த வகையிலும் எனக்கும், அவருக்கும் சம்பந்தமே கிடையாது. நான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்த புகைப்படங்களை அவர் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே அந்த படங்களை அவர் அழித்துவிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
பின்னர் மனுதாரரும் நேரில் ஆஜராகி, அந்த பெண்ணுக்கும் எனக்கும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே தொடர்பு இருந்தது. இனி அந்த பெண்ணுக்கு எந்த வகையிலும் நான் தொந்தரவாக இருக்கமாட்டேன் என்று உறுதி அளித்தார்.
அப்போது அவரது செல்போனை அங்கிருந்த தொழில்நுட்ப அலுவலரிடம் ஒப்படைத்தார். அவர், அந்த செல்போனில் இருந்த அந்த பெண் தொடர்பான புகைப்படங்களை அழித்துவிட்டார்.
விசாரணை முடிவில், மனுதாரரும், அந்த பெண்ணும் தெரிவித்த தகவல்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் அந்த பெண்ணை மனுதாரர் எந்த வகையிலாவது தொந்தரவு செய்தால் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.