மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது
ஓமலூர் அருகே மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்
ஓமலூரை அடுத்த தொளசம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 26). இவர் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் பள்ளி நுழைவாயில் அருகே தடுத்து நிறுத்தினார். பின்னர் சக்திவேல் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளார். மேலும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இது குறித்து மாணவி, தனது தந்தையிடம் தெரிவித்தார். இது தொடர்பான புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.