பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூடுகிறது தமிழக சட்டசபை

இந்த கூட்டத்தொடர் மிகச் சூடான விவாதங்களுடனும், கருத்து மோதல்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.;

Update:2024-02-11 02:22 IST

கோப்புப்படம்

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அந்த வகையில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் நாளை தொடங்குகிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார்.

இதற்காக சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் அப்பாவு ராஜ்பவனுக்கு நேரில் சென்று, கவர்னர் ஆர்.என்.ரவியை உரையாற்ற வரும்படி முறைப்படி அழைப்பு விடுத்திருந்தார்.

உரை நிகழ்த்துவதற்காக காலை 9.57 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி, சட்டசபை செயலகத்திற்கு வருவார். அவரை நுழைவு வாயிலில் சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். சிவப்பு கம்பள விரிப்பு மரியாதையுடன் கவர்னர் அழைத்து வரப்படுவார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்படுகிறது. சபை மார்ஷல் முன்செல்ல, சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் கவர்னர் ஆர்.என்.ரவியை அழைத்து வருவார்கள்.

சபாநாயகர் இருக்கைக்கு கவர்னர் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பிறகு கவர்னர், தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். அவர் உரை நிகழ்த்தி முடித்ததும், கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

பின்னர் தேசிய கீதத்துடன் சபை நிகழ்வுகள் நிறைவடையும். பின்னர் கவர்னரை அதே மரியாதையுடன் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் வழியனுப்பி வைப்பார்கள்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் அறையில் அவர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடும். கவர்னர் உரை மீதான விவாதங்களுக்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

அடுத்த வாரம் 19-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் கவர்னர் உரையில் முக்கியமான அறிவிப்புகள் இருக்குமா? என்பது உறுதிபடத் தெரியவில்லை.

கவர்னர் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியை டிடி தமிழ் நியூஸ் மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இந்த கூட்டத்தொடர் மிகச் சூடான விவாதங்களுடனும், கருத்து மோதல்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அப்போது, தமிழக அரசு தயாரித்து அளித்திருந்த உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் அவர் வாசித்தார். ஆனால் அவை நீக்கப்பட்டு, அரசு கொடுத்திருந்த உரையே பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்