தாமரை கண்மாயை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
திருமயத்தில் உள்ள தாமரை கண்மாயை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை பருவமழைக்கு முன்பாக அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
தாமரை கண்மாய்
திருமயம் பகுதியில் உள்ள முக்கிய பாசன கண்மாயில் ஒன்றாக தாமரை கண்மாய் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதை வைத்து தான் இந்த பகுதி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இக்கண்மாய் திருமயத்திற்கு மட்டுமல்லாது பாம்பாறு சார்ந்துள்ள விவசாய நிலங்களுக்கும் நீர் வழங்கும் முக்கிய கண்மாயாக உள்ளது. எனவே திருமயம் தாமரை கண்மாய் திருமயம் தாலுகாவில் உள்ள முக்கிய நீர்ப்பாசன கண்மாயாகும்.
கடந்த சில ஆண்டுகளாக திருமயம் பகுதியில் நிலவி வரும் வறட்சி காரணமாக கண்மாயில் தண்ணீர் இல்லாமல் போனது. அதேசமயம் திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலை அமைக்கும் போது தாமரை கண்மாய் மூலம் பாசன வசதி பெறும் வயல்களில் பல ஏக்கர் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் கையகப்படுத்தப்பட்டு வயல்கள் அழிக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
இதனால் கண்மாயில் இருந்து பாசன வசதி பெறும் வயல்களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் நிலவி வருகிறது. இந்நிலையில் மழையின்றி வறட்சியும் தொடர்ந்ததால் கண்மாயின் உட்பகுதியில் கருவேல மரங்கள் முளைக்க தொடங்கியது. பின்னர் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கருவேல மரங்கள், புதர் செடிகள் கண்மாய் உட்புறம் முழுவதும் பரவி காணப்படுகிறது.
இதனிடையே கடந்த ஆண்டு பெய்த மழையில் பல வருடங்களுக்குப் பிறகு கண்மாய் நிரம்பியது. இந்நிலையில் தொடர்ந்து கண்மாயில் நான்கு மாதத்திற்கு மேலாக நீர் இருப்பு இருந்ததால் கண்மாய்க்குள் இருந்த சீமைக்கருவேல மரங்களின் வேர் தற்போது அழுகி மரங்கள் பட்டு, கருகிப் போய் காணப்படுகிறது.
கண்மாய் புத்துயிர் பெற வாய்ப்பு
இதை பார்ப்பதற்கு அடர்ந்த கருகிய வனம் போல் காட்சியளிக்கிறது. தற்போது கண்மாயில் நீர் குறைவாக உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருகி போய் உள்ள சீமைக்கருவேல மரங்களை எந்திரம் கொண்டு வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும் அல்லது தீ வைத்து எரிப்பதன் மூலம் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிய வாய்ப்புள்ளது. மேலும் காடு போல் காட்சியளிக்கும் கண்மாய் பொலிவு பெறும். இதனிடையே இன்னும் ஓரிரு மாதங்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதன் மூலம் திருமயம் தாமரை கண்மாய் புத்துயிர் பெற வாய்ப்பு உள்ளது.
தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும். சென்ற முறை மழை பெய்து மூன்று முறை கண்மாய் நிரம்பி உபரி நீர் வெளியே போனது. தூர்வாரினால் கூடுதலாக நீர் நிரம்புவதற்கு வாய்ப்பாக அமையும். கண்மாயில் உள்ள மடைகள் சேதம் அடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. சேதமடைந்த மடைகளை சீரமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தருணத்தை பயன்படுத்தி கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.