கோடை சிறப்பு மலை ரெயில் நாளை முதல் இயக்கம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
சிறப்பு ரெயில்
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். மலைப்பகுதியில் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.
ஊட்டியில் கோடை சீசன் நடைபெற்று வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் மலை ரெயிலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டத்தால் டிக்கெட் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சனிக்கிழமை முதல் வருகிற ஜூலை மாதம் 16-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்படுகிறது.
முதல் வகுப்பு
இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை மாதம் 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் 9 முறை இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்பு ரூ.1,210, இரண்டாம் வகுப்பு ரூ.815, ஊட்டிக்கு முதல் வகுப்பு ரூ.1,575, இரண்டாம் வகுப்பு ரூ.1,065 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முன்பதிவு தொடங்கியது. சிறப்பு மலை ரெயில் சேவை தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.