நெல்லையில் வெளுத்து கட்டிய கோடை மழை

நெல்லையில் நேற்று கோடை மழை வெளுத்து கட்டியது. அப்போது சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. களக்காடு அருகே சூறைக்காற்றில் 20 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.

Update: 2023-04-21 19:16 GMT

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கோடை காலம் தொடங்கி இருப்பதையொட்டி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நெல்லையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வாட்டி எடுக்கிறது.

இதனால் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. பெரும்பாலான மக்கள் பகல் நேர பயணத்தை தவிர்த்து வருகிறார்கள். நேற்றும் வழக்கம் போல் காலை முதல் வெயில் கடுமையாக தாக்கத்தொடங்கியது. 100.4 டிகிரி வெயில் பதிவாகி அனல் காற்று வீசியது.

இந்த நிலையில் மாலை 3.30 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்து வெயில் குறைந்தது. பின்னர் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேல் வெளுத்து கட்டியது.

நெல்லை சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், பேட்டை, சுத்தமல்லி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன.

பலத்த கோடை மழை காரணமாக நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி மழை தண்ணீர் குளம் போல் தேங்கியது. மதுரை ரோட்டில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன. கடும் வெயில் தாக்கிய நிலையில் திடீரென்று மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இரவு நேரத்தில் நிலவும் உஷ்ண நிலையும் நேற்று இரவு சற்று குறைந்திருந்தது.

களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மஞ்சுவிளை, கருவேலங்குளம், எஸ்.என்.பள்ளிவாசல், ராமகிருஷ்ணாபுரம், சாலைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதில் ஆங்காங்கே மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. மஞ்சுவிளை பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்றில் 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்துள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். இதுதவிர காமராஜர் நகர், பத்மநேரி, கல்லடிசிதம்பரபுரம், பெருமாள்புரம் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகளும் சாய்ந்து சேதம் அடைந்தன.

வள்ளியூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் நெல்லை மாவட்டத்தின் பிற பகுதிகள், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் வெயில் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்