சில்மிஷத்தை அரங்கேற்றிய மாணவ-மாணவிகள்

நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் சில்மிஷத்தை அரங்கேற்றிய மாணவ-மாணவிகள், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-07-22 15:14 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் சில்மிஷத்தை அரங்கேற்றிய மாணவ-மாணவிகள், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

மாநகராட்சி பூங்கா

நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான சாதனங்கள் உள்ளன. காலையிலும், மாலையிலும் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். சிறுவர்கள் மாலையில் வந்து விளையாடி மகிழ்வது வழக்கம்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், வாலிபர்கள், இளம்பெண்கள் இங்கு வந்து பொழுதை கழித்துவிட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று பூங்காவில் ஏராளமான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் குவிந்தனர். அவர்களில் சிலர் சில்மிஷத்தை அரங்கேற்றினார்கள். இதை பார்த்தவர்கள் உடனே கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பூங்காவுக்கு கோட்டார் போலீசார் விரைந்து வந்தனர்.

மாணவ- மாணவிகள் ஓட்டம்

அப்போது அங்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரங்கள் மற்றும் செடி-கொடிகளிடையே மாணவ, மாணவிகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிலர் மடியில் படுத்தபடியும், நெருக்கமாக இருந்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மாணவ, மாணவிகளை எச்சரித்தனர். உடனே மாணவ-மாணவிகள் அவசர, அவசரமாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மாநகராட்சி பூங்காவில் போலீசார் தினமும் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்