கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்றபோது மாடு முட்டி பள்ளி மாணவி காயம் அடைந்தாள்.
பள்ளி மாணவி
கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் 13 வயது சிறுமி மோனிஷா. இவர், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை, மாணவியின் ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொள்ளும் பணிக்காக மாணவியை, அவரது தந்தை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார்.
அப்போது பள்ளிக்கு வெளியே பெங்களூரு சாலையில் நடந்து வந்த சிறுமியை சாலையில் வந்த மாடு முட்டி தள்ளியது. இதில், தூக்கி வீசப்பட்ட சிறுமிக்கு காலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மாட்டை விரட்டி, மாணவியை மீட்டனர். பின்னர் மாணவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று மாணவி வீடு திரும்பினார்.
உரிமையாளர்களுக்கு அபராதம்
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் சாலையில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளன. சாலைகளில் குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.