தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம்

தரகம்பட்டி அருகே இயங்கும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடவில்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என கலந்தாய்வு கூட்டத்தில் 3 கிராம ஊராட்சி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-11-06 19:14 GMT

சுண்ணாம்புக்கல்குவாரி

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே மேலபகுதி ஊராட்சிக்குட்ட்ட வீர கவுண்டம்பட்டி பகுதியில் தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி சுண்ணாம்புக்கல் குவாரியில் கற்களை எடுப்பதற்காக வெடி வைத்தபோது, கற்கள் சிதறி மின்கம்பி மீது விழுந்ததில் 4 பெண்கள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து கிராமமக்கள் நலன் கருதி சுண்ணாம்புக்கல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருவாய்த்துறை உள்பட மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

கலந்தாய்வு கூட்டம்

இதையடுத்து சுண்ணாம்புக்கல் குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மேலப்பகுதி, தேவர்மலை, காளையாபட்டி ஆகிய 3 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி நேற்று தேவர்மலையில் உள்ள கதிர்நரசிங்க பெருமாள் கோவில் வளாகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மாணிக்கம் (மேலப்பகுதி), நக்கீரன் (தேவர்மலை), ஆரோக்கியமேரி மரியலூயிஸ் (களையப்பட்டி) ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், 3 ஊராட்சிகளில் உள்ள 40 குக் கிராமங்களின் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கல்குவாரியை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் 40 கிராம பொதுமக்களை திரட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது,

அமைப்பை ஏற்படுத்தி...

மேலும் தேவர்மலை, மேலபகுதி, காளையாம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளில் உள்ள கிராம பொதுமக்கள் சார்பாக மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பு என்று அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து அறப்போராட்டங்களை முன்னெடுத்து நடத்துவது என்பன உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மேலப்பகுதி தேவர்மலை காளையாப்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்