போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியை தி.மு.க. அரசின் போக்குவரத்துத் துறை கோரியுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.
புதிய பேருந்துகள் எதையும் கொள்முதல் செய்யாமல், ஓட்டை ஒடிசலான பேருந்துகளால் ஏற்கனவே போக்குவரத்துத் துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய இந்த தி.மு.க. அரசு, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாகத் தான் தற்போது ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களை தனியார் வசம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்வதுடன், போக்குவரத்துக் கழகத்தை தனியார்வசமாக்கும் எவ்வித முயற்சியாக இருப்பினும் அதனை கைவிட்டு, முறையாக பணியமர்த்தி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்து பொதுமக்களுக்கு பயண "சேவை"யை வழங்குமாறு தி.மு.க. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.