"கோவை ஆட்சியர் அனுமதி பெற்றே ஆதியோகி சிலை கட்டப்பட்டது" - ஈஷா மையம் விளக்கம்

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே ஆதியோகி சிலை கட்டப்பட்டது என்று ஈஷா மையம் விளக்கமளித்துள்ளது.

Update: 2023-09-02 10:39 GMT

சென்னை,

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியின பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்தம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறை துணை இயக்குனர் ஆர்.ராஜகுரு கோர்ட்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஆதியோகி சிலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு திட்ட அனுமதியோ அல்லது கட்டுமான அனுமதியோ வழங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் எங்களது அலுவலகத்தில் இல்லை. மாவட்ட கலெக்டர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்தும் தடையில்லா சான்று பெற்றதற்கான ஆவணங்களும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர், உரிய அனுமதி பெறபடவில்லை என தெரியவந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஷா யோகா மையம் தன்னிடம் உள்ள ஆவணங்களை 2 வாரத்திற்குள் அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனிடையே, ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் எங்களிடம் உள்ளது என்றும், எங்கேயும், எப்போதும் அதனை சமர்ப்பிப்போம் என்றும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே ஆதியோகி சிலை கட்டப்பட்டது என்று ஈஷா நிர்வாகி ஒருவர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,

கோவையில் ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆதியோகி சிலை வைப்பதற்கான அனுமதியை கோவை மாவட்ட ஆட்சியர் 2016ம் ஆண்டே வழங்கிவிட்டார். கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே ஆதியோகி சிலையை கட்டியுள்ளோம். ஆதியோகி சிலை எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்