கோவை கார் குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை உக்கடம் பகுதியில் கார் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் இதுவரை 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரை போலீஸ் காவலிலும் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபு அனீபா, பவாஸ் ரகுமான், சரண் உள்ளிட்ட 3 பேரை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், கைது செய்யப்பட்ட 3 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் போலீஸ் காவல் முடிந்து வரும் 14-ந் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அபு அனீபா, பவாஸ் ரகுமான், சரண் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் கைதான 3 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்த நிலையில் தற்போது கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது.