கால்நடைகளை கொன்ற புலியை தேடும் பணி தீவிரம்

தேவர்சோலை அருகே கால்நடைகளை கொன்ற புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2023-10-06 20:30 GMT

தேவர்சோலை அருகே கால்நடைகளை கொன்ற புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கால்நடைகளை கொன்ற புலி

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே தேவன்-1 கிராமத்துக்குள் புலி ஒன்று அடிக்கடி ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் புலி தாக்க வாய்ப்பு உள்ளதால் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாதேவன் என்பவரது பசு மாட்டை புலி கடித்துக் கொன்றது. தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு இழப்பீடு தொகையை வழங்கினர்.

தேடும் பணி தீவிரம்

அப்போது புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த நெலாக்கோட்டை சரக வனத்துறையினர் மற்றும் கூடலூர் வனத்துறையினர் இணைந்து 20-க்கும் மேற்பட்டோர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

ஊருக்குள் வரும் புலியை அடையாளம் காண கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பின்னர் அடையாளம் காணப்பட்டு, உயர் அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்