பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
திருச்சுழி அருகே பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருச்சுழி,
திருச்சுழி அருகே கத்தாளம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் வழக்கம் போல் ஆசிரியர்கள் பள்ளியை திறந்து பார்த்தபோது ஒரு வகுப்பு அறையில் மேற்கூரை பெயர்ந்து மாணவர்கள் அமரும் இடத்தில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இரவு நேரத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்சமயம் அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.