பள்ளி தலைமை ஆசிரியர் ஏரியில் தவறி விழுந்து சாவு
பாகலூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓசூர்:-
பாகலூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏரியில் பிணம்
ஓசூர் அருகே பாகலூர் லிங்கரபுரம் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதை கண்டவர்கள் பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரது சட்டை பையில் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதில் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்றும், கொத்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்றும் இருந்தது.
குடும்ப தகராறு
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ெவளியான தகவல்கள் விவரம் வருமாறு;-
ஓசூர் அருகே பாகலூர் அருகே பெலத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (57) என்பவர், கொத்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
குடும்ப பிரச்சினையால் கடந்த 6 மாதங்களாக பெலத்தூரில் தனியாக வசித்து வந்ததாகவும், குடும்பத்தினர் பாகலூர் ராஜீவ் நகரில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது. நேற்று மதியம் கிருஷ்ணமூர்த்தி, ½ நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு சென்றார்.
தவறி விழுந்து சாவு
கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர், மது போதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் தவறி விழுந்து பள்ளி தலைமை ஆசிரியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.