அனுமதி உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

நீலகிரியில் ஆட்டோக்கள் 15 கி.மீ. தூரம் வரை இயக்கிக்கொள்ள அனுமதி வழங்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் சுற்றுலா வாகன ஓட்டிகள் மனு அளித்தனர்.

Update: 2023-01-23 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரியில் ஆட்டோக்கள் 15 கி.மீ. தூரம் வரை இயக்கிக்கொள்ள அனுமதி வழங்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் சுற்றுலா வாகன ஓட்டிகள் மனு அளித்தனர்.

15 கி.மீ. இயக்க அனுமதி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 100 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

அதன்படி ஊட்டி சுற்றுலா கார் சுமோ மேக்சிகேப் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் கோவர்தன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் குக்கிராமங்களுடன் அதிக வனப்பகுதிகள் உள்ளன. இங்கு தொழிற்சாலைகளோ அல்லது தொழில்துறை நிறுவனங்களோ இல்லை. சுற்றுலா பயணிகளை நம்பி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நீலகிரியில் இயங்கும் ஆட்டோக்களுக்கு 15 கிலோ மீட்டர் வரை இயக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த அனுமதி உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

இதுதொடர்பாக ஏற்கனவே கோரிக்கையை முன் வைத்தோம். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. நாங்கள் அரசுக்கு வரி செலுத்தியும், சுற்றுலா வாகனங்கள் இயக்கம் இல்லாமல் தவித்து கொண்டு வருகிறோம். நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் பலர் சொந்த வாகனங்களிலேயே வருகின்றனர். மேலும் சிலர் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். இதனால் சுற்றுலா வாகன ஓட்டிகள் நிலை மோசமாக உள்ளது. எனவே, ஆட்டோக்களுக்கு 15 கி.மீ. தூரம் நீட்டித்து வழங்கப்பட்ட அனுமதி உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீலகிரி மக்கள் தொகுதி இயக்க தலைவர் எஸ்.கே.ராஜ் அளித்த மனுவில் கூடலூர் பகுதியில் மத்திய பாடத்திட்டன் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஊட்டியில் மட்டுமே எழுத வேண்டும் என தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சேரம்பாடி, தாளூர், பாட்டவயல், பந்தலூர் உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகள் 80 கி.மீ. பயணித்து ஊட்டிக்கு சென்று தேர்வு எழுதுவது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, மாணவர்களின் நலன் கருதி கடந்த ஆண்டை போல அந்தந்த பள்ளியில் மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்