திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்
திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நாட்டுக்கோழி விற்பனை அமோகம்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நாட்டுக்கோழி விற்பனை நேற்று அமோகமாக நடைபெற்றது.
நாட்டுக்கோழி விற்பனை
திருச்சிற்றம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கிராமப்புற பெண்களின் பொருளாதார உயர்வுக்கு கால்நடை வளர்ப்பு, தென்னங்க கீற்று முடைதல், கீரை வகைகள் உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் விவசாயம், விவசாய நடவு பணிகள், 100- நாள் வேலை திட்டம் போன்றவை அவர்களின் பொருளாதார உயர்வுக்கு கைகொடுத்து வருகின்றன.
இவற்றிற்கு அடுத்தபடியாக பெரும்பாலான வீட்டுப்பெண்கள், வீடுகள் தோறும் நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகின்றனர். திருச்சிற்றம்பலத்தில் வாரச்சந்தை பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கூடினாலும், அன்றைய தினம் காலையில் வழக்கமான நாட்டுக்கோழிகள் விற்பனை நடைபெற்றுவது வழக்கம்.
விற்பனை அமோகம்
பிராய்லர் கோழிகளின் விற்பனை எவ்வளவு தான் நடைபெற்றாலும், நாட்டுக்கோழிகளின் சுவையும் தரமும் அதனை சுவைத்தவர்களுக்கே புரியும். குறிப்பாக, முக்கிய பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட நாட்டுக்கோழிகளின் விற்பனையும் விலை உயர்வும் அதிகமாக இருப்பது இயற்கை. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நாட்டுக்கோழிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒரு நாட்டுக்கோழி ரூ.600-ல் இருந்து ரூ.800 வரை விலை போனது. தீபாவளி பண்டிகையை அசைவ விருந்துடன் சிறப்பாக கொண்டாட பலரும் நாட்டுக்கோழிகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். கோழி வளர்த்து விற்பனை செய்ததில், லாபம் அதிக அளவில் கிடைத்ததால் கோழி வளர்த்தவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.