சேறும், சகதியுமாக மாறிய சாலை

கூடலூர் சளிவயலில் சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-06-27 22:00 GMT

கூடலூர்

கூடலூர் சளிவயலில் சேறும், சகதியுமான சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேறும், சகதியுமான சாலை

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர குரும்பர்பாடியில் ஆதிவாசி மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் கூடலூருக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து பல ஆண்டுகளாக காணப்படுகிறது.

இதனால் புதுப்பிப்பு பணி மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சாலை அமைக்க வில்லை. தற்போது மழையும் அடிக்கடி பெய்வதால் சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதனால் இருசக்கரம் உட்பட அனைத்து வாகனங்களையும் சிரமத்துடன் இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் சாலையோர விநாயகர் கோவில் மற்றும் அங்கன்வாடி மையம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் உள்ளது.

பொதுமக்கள் அவதி

இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் சேற்றில் நடந்து செல்கின்றனர். இதே போல் வயதான பெண்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில சமயங்களில் பலர் வழுக்கி விழும் நிலையை காண முடிகிறது. இதனால் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சளிவயல் பகுதியில் பழுதடைந்த சாலையால் அவசர நேரத்தில் நோயாளிகள், கர்ப்பிணிகளை விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது.

இதனால் அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் உட்பட பெண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்