தகவல் அறியும் உரிமை சட்டத்தை முறையாக தெரிந்துகொள்ள வேண்டும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2022-09-15 18:05 GMT

தகவல் அறியும் உரிமை சட்டத்தை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

பயிற்சி வகுப்பு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கான 2 நாட்கள் பயிற்சி வகுப்பு நடந்தது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

தகவல் அறியும் உரிமை சட்டம் மிகவும் சிறப்பானது. உரிய தகவல் கோரி முறையான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. ஒளிவு மறைவு அற்ற நிர்வாக தன்மை மற்றும் ஊழல் அற்ற நிர்வாகம் இவைகளை முன்னிறுத்தி இந்த தகவல் அறியும் சட்டம் செயலாற்றுகின்றது. சில நேரங்களில் பொதுமக்கள் கேட்கும் தகவல்கள் அலுவலர்களுக்கு சில பிரச்சினைகளையும், இன்னல்களையும் ஏற்படுத்துகிறது. ஆகவே இச்சட்டத்தை முறையாக தெரிந்து கொண்டு தேவையான தகவல்களை அளிப்பதற்கு, எவ்வித பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் தற்காத்து கொள்ள இப்பயிற்சி வகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.

தெரிந்துகொள்ள வேண்டும்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உள்ள சரத்துக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோன்று இச்சட்டத்தில் பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நடைபெற்று அது குறித்த தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்புகள் குறித்தும் அலுவலர்கள் ஒவ்வொன்றாக தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பின் மூலம் தகவல் கூறுபவர்களுக்கு உரிய பதிலை அரசு விதிமுறைகளின் படி வழங்கிட வேண்டும்.

ராணிப்பேட்டை புதிய மாவட்டம் உருவாகி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இச்சட்டம் குறித்து முறையாக தெரிந்து கொண்டால் உங்கள் துறைகளின் கீழ் உள்ள அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் நல்ல பயிற்சி வழங்கிட முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தொடர்ந்து புதுப்புது மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. அதையெல்லாம் முறையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்