வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்
பணி நீக்கம்-கைதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.;
காத்திருப்பு போராட்டம்
கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியனின் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியனின் இடைக்கால பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று தமிழகம் முழுவதும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்களை எழுப்பினர்
அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் குமரி அனந்தன், மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ் ஆகியோர் தலைமையிலும், பெரம்பலூர் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் துணை தாசில்தார் சிலம்பரசன் தலைமையிலும், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் பாக்கியராஜ் தலைமையிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தந்த அலுவலகங்களில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் பழனியப்பன் தலைமையிலும், குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கபிலன் தலைமையிலும், ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துக்குமரன், இளநிலை வருவாய் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் தலைமையிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தந்த அலுவலகங்களில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். வருவாய்த்துறை அலுவலர்களின் காத்திருப்பு போராட்டத்தினால் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது.