கருப்பு பட்டை அணிந்து வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கருப்பு பட்டை அணிந்து வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.;
வங்கியில் அடமான கடன்
திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் உள்பட 2 பேரை பங்குதாரர்களாக கொண்டு அரியமங்கலத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ரூ.22 கோடி அடமானக்கடன் வாங்கி சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். ஆனால் அவர்கள் கடன் தொகையை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை. மேலும் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிச்சென்றுவிட்டனர்.
இதனால் அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து கொடுக்க மாவட்ட கலெக்டருக்கு வங்கி நிர்வாகம் மனு கொடுத்தது. மனுவை விசாரித்த கலெக்டர், கடனீட்டு சொத்து மீதான உரிமை அமலாக்க சட்டப்படி, அடமான சொத்துக்களை ஜப்தி செய்து வங்கி வசம் ஒப்படைக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
ஜப்தி நடவடிக்கை
அதனடிப்படையில், நேற்று முன்தினம் மதியம் திருச்சி மேற்கு தாலுகா மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் 4 வங்கி அதிகாரிகள் காஜாமலை லூர்துசாமிபிள்ளை காலனியில் உள்ள அடமான சொத்தை ஜப்தி செய்ய சென்றனர். அப்போது, அந்த இடத்தின் உரிமையாளர் கார்த்திக் உள்பட 15 பேர் மண்டல துணை தாசில்தாரையும், வங்கி ஊழியர்களையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 5 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில் கார்த்திக் உள்பட 15 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காத்திருப்பு போராட்டம்
இந்தநிலையில் மண்டல துணை தாசில்தாரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 750-க்கும் மேற்பட்டோர் நேற்று கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ், நேரடி நியமன அலுவலர் சங்க மாநில செயலாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரபு ஆகியோர் தலைமையில் அவர்கள் பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து கோஷமிட்டபடி இருந்தனர்.
பணிகள் முடங்கின
அவர்களுடன் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எட்டப்படாதால் போராட்டம் மாலை வரை நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் குதித்ததால் நேற்று அந்த அலுவலகங்களில் பணிகள் முடங்கின. மேலும் மாலையில் அனைத்து அரசு ஊழியர்களும் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆறுதல்
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் துணை தாசில்தார் மற்றும் வங்கி ஊழியர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது, அதிகாரிகளை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இதுவரை 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து தாக்கியவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
முசிறியில்...
இதேபோல் மண்டல துணை தாசில்தார் பிரேம்குமாரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி முசிறி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. வட்ட பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான அலுவலர்கள் கலந்து கொண்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிப்படைந்தன.