சொத்து வரி உயர்வுக்கு ஆட்சேபனை இல்லாததால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
சொத்துவரி உயர்வுக்கு ஆட்சேபனை இல்லாததால் தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்து கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தஞ்சாவூர்:
சொத்துவரி உயர்வுக்கு ஆட்சேபனை இல்லாததால் தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்து கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மாநகராட்சி அவசர கூட்டம்
தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் நேற்றுகாலை நடந்தது. இதற்கு மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியவுடன் சொத்து வரி, காலிமனை வரி சீராய்வு குறித்த தீர்மானம் விவாதத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி 600 சதுர அடி பரப்பளவுக்குட்பட்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதமும், 601 சதுர அடி முதல் 1,200 சதுர அடிக்குட்பட்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 100 சதவீதமும், தொழிற்சாலை பயன்பாட்டு கட்டிடம் மற்றும் சுயநிதி பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 75 சதவீதமும் உயர்வு செய்யப்படுகிறது.
காலிமனை வரி விதிப்பு
காலிமனை வரி விதிப்புக்கு ஒரு சதுர அடி நிலத்துக்கு தற்போது உள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதம் உயர்வு செய்து, காலி மனை வரி பொது சீராய்வு செய்யப்படுகிறது. சொத்து வரி விதிப்பு செய்யும்போது கட்டிடத்தின் பரப்பளவுக்கு இரு மடங்குக்கு மேல் உள்ள காலியிடத்துக்கு சொத்து வரியுடன் சேர்த்து காலி மனை வரி விதிப்பு செய்யப்படுகிறது.
வணிக பகுதிகளுக்கு 3 மடங்கும், வணிகம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு 2 மடங்கும், குடியிருப்பு பகுதிக்கு 1½ மடங்கும், குடிசை பகுதிக்கு ஒரு மடங்கும் உயர்த்தப்படுகிறது. இந்த சொத்து வரி மற்றும் காலிமனை வரி சீராய்வு குறித்து பொதுமக்களிடம் ஆட்சேபனைகள், ஆலோசனைகள் ஏதும் இருந்தால் மாநகராட்சி ஆணையருக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என கடந்த மாதம் 13-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை ஆட்சேபனை, ஆலோசனை எதுவும் வராததால், சொத்து வரி, காலிமனை வரி சீராய்வை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறை படுத்துவது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது.
புறக்கணிப்பு
இந்த தீர்மானத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஒரு தீர்மானம் மட்டுமே அவசரமாக நிறைவேற்றப்பட்டதால் 1 நிமிடத்தில் கூட்டம் நிறைவடைந்துவிட்டது.