இணையவழி விளையாட்டுகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை பாதுகாக்க தீவிர நிலைப்பாடு எடுப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இணைய வழி விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர், நிதித் துறை உதயசந்திரன், இ.ஆ.ப., அரசு செயலாளர், வணிக வரி மற்றும் பதிவுத் துறை, பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., முதன்மை செயலாளர் / வணிக வரி ஆணையர் தீரஜ் குமார், இ.ஆ.ப., மற்றும் வணிக வரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இணையவழி விளையாட்டுக்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, கூட்ட நடவடிக்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில், சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக தங்கம் தென்னரசு வலிமையான கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.
இணையவழி சூதாட்டம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இணையவழி பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடைசெய்யப்பட்ட, அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுக்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்தார்.
மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.