டெல்லி செங்கோட்டையையே வியக்கத்தக்க வகையில் மாற்றத்தை உருவாக்கும்;கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
டெல்லி செங்கோட்டையையே வியக்கத்தக்க வகையில் மாற்றத்தை உருவாக்கும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.;
ஈரோடு அசோகபுரத்தில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கு அ.தி.மு.க.வினர் அயராது உழைத்து வருகிறார்கள். வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த தேர்தல் எதிர்காலத்தில் டெல்லி செங்கோட்டையையே வியக்கத்தக்க வகையில் மாற்றத்தை உருவாக்கும். ஏனென்றால் கிழக்கு தொகுதிக்கு பிறகு தான் நாடாளுமன்ற தேர்தல் வரஇருக்கிறது. இந்த குரல் டெல்லி செங்கோட்டையில் ஒலிக்க இருக்கிறது. எதிர்கட்சியினர் மாடியில் இருந்து மக்களை சந்திக்கிறார்கள். நாங்கள் மக்களோடு இருந்து மாடியை பார்க்கிறோம். வெற்றி என்பது எங்கள் லட்சியத்தில் இலக்காக இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் எந்த ஒரு தடையும் இல்லை. பிரசாரத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. மெகா கூட்டணியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர், வேட்பாளரை அறிவித்த பிறகு களம் இன்னும் வேகமாக இருக்கும். 2, 3 நாட்களுக்கு பிறகு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் கூட்டணி தொடர்பாக அறிவிக்க இருக்கிறார்கள். மக்களை பொறுத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.